Published : 13 Dec 2018 03:30 PM
Last Updated : 13 Dec 2018 03:30 PM

கமல்நாத்துக்கு முதல்வர் பதவி; சிந்தியா துணை முதல்வர்: ம.பி.யில் காங்கிரஸ் சமரசம்?

மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவி கமல்நாத்துக்கும், துணை முதல்வர் பதவி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சமரச திட்டத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. அங்கு முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக மத்திய பிரதேசத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத்தை பதவியில் அமர்த்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் முதல்வர் பதவிகோரி போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குவாலியர் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸூக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்ல மூத்த தலைவரான கமல்நாத் பொருத்தமானவராக இருப்பார் என கட்சித் தலைமை கருதுகிறது. அதேசமயம் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து வலிமையான துறையை தர ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. அதுவரை துணை முதல்வர் பதவியில் ஜோதிராதித்ய சிந்தியா தொடர்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x