Last Updated : 12 Dec, 2018 03:34 PM

 

Published : 12 Dec 2018 03:34 PM
Last Updated : 12 Dec 2018 03:34 PM

வானில் பறந்த பாஜகவை தரையிறக்கிய மக்கள்: சிவசேனா விளாசல்

காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் பேசிய நிலையில், பாஜக இல்லாத காலத்தை மக்கள் உருவாக்கிவிட்டார்கள் என்று 5 மாநிலத் தேர்தல் முடிவு குறித்து சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக தோல்வி அடைந்து, அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்கிறது.

இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ இதழ்  ‘சாம்னா’வில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜகவைத் தவிர்த்து எந்தக் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்கிற மூடநம்பிக்கையை உடைத்திருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்தவர்களை மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தத் தேசம் நான்கு அல்லது ஐந்து தொழிலதிபர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல் நிர்வகிக்கப்படுகிறது. அதனால்,தான் ரிசர்வ் வங்கிபோன்ற முக்கியமான நிறுவனங்களைக் கூட சிதைக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துவது என்னவென்றால், பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்று கூறிவந்தார்கள். ஆனால், மக்கள் பாஜக ஆண்ட மாநிலங்களிலேயே பாஜக இல்லாத காலத்தை உருவாக்கி உணர்த்திவிட்டார்கள்.

ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள், மத்தியப் பிரதேசம் மான்டசூரில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள், ஆனால், அவர்களுக்குத் துப்பாக்கி குண்டுகள் பரிசளிக்கப்பட்டன. இவை அனைத்துக்கும் மக்கள் தேர்தலில் பழிதீர்த்துவிட்டார்கள்.

மத்திய அரசு செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை கேலிக்கூத்தாகி, நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது.

ஏராளமான மக்கள் வேலையிழந்தனர், பணவீக்கம் அதிகரித்தது. ஆனால், அந்தநேரத்தில் நமது பிரதமர் மோடி, உலக அரசியல் பேசுவதற்காக விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். 4 மாநிலத் தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்தபடியே வந்தார். மோடி பேசிய பல வார்த்தைகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் வரவேற்றார். இறுதியில், அரசின் செயல்பாடுகளால் சோர்வடைந்து, ஆளுநர் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டார்.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x