Published : 06 Dec 2018 04:53 PM
Last Updated : 06 Dec 2018 04:53 PM

பாஜகவில் இருந்து தலித் பெண் எம்.பி விலகல்

உத்தரப் பிரதேச மாநிலம் பாஜகவைச் சேர்ந்த தலித் சமூக தலைவரும், எம்.பி.யுமான சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்து இன்று விலகினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. சமீபகாலமாக அவர் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்து வந்தார். மனுவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குரங்குகள், அரக்கர்கள் என்று அழைக்கிறார்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்போவது என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சாவித்ரிபாய் புலேயின் கருத்தும் கடும் எதிர் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாஜகவில் இருந்து அவர் இன்று விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்றவை மதத்தின் பெயரால் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக முயலுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அழிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. வளர்ச்சி திட்டங்களில் கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக கோயில், சிலைகள் என தேவையற்ற வகையில் செலவு செய்கிறது’’ எனக் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x