சபரிமலை போராட்டம்: பத்தனம் திட்டாவில் பிரதமர் மோடி பேசுகிறார்

சபரிமலை போராட்டம்: பத்தனம் திட்டாவில் பிரதமர் மோடி பேசுகிறார்
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயிலுக்கு அதிகஅளவில் பக்தர்கள் வருகை தரும்நிலையில், காவல்துறையினர் கெடுபிடி செய்து வருவதாக கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாஜவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜகவின் சபரிமலை போராட்டத்துக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஜனவரி -6ம் தேதி கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பாஜக மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கேரளாவில் பாஜகவின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக அமையும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஜனவரி 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் கேரள மாநில பாஜக இளைஞரணி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in