தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது: தெலங்கானாவில் மீண்டும் ஜாதி ஆணவப் படுகொலை

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது: தெலங்கானாவில் மீண்டும் ஜாதி ஆணவப் படுகொலை
Updated on
1 min read

தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பதி சத்தேனா - லட்சுமி. இவர்களது மகள் அனுராதா. அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு அனுராதாவின் பெற்றோரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து 3-ம் தேதி ஹைதராபாத் சென்ற அவரகள் அங்குள்ள ஆரியசமாஜ் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் திருமணத்தையும் பதிவு செய்துள்ளனர். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

மகள் அனுராதா வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் சத்தேனா கடும் கோபத்தில் இருந்துள்ளார். மகள் சொந்த ஊர் திரும்பிய தகவல் தெரிந்ததும் உறவினர்களுடன் சென்று லட்சுமண் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது வீட்டை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் அனுராதாவை வெளியே இழுத்து வந்துள்ளது.

ஊர் மக்கள் கூடி வேடிக்கை பார்க்க எதை பற்றியும் கவலைப்படாமல் சத்தேனாவும் அவரது உறவினர்களும் அனுராதாவை அடித்து உதைத்து தெருவில் இழுத்து வந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்து உடலை எரித்ததாக கூறப்படுகிறது. சாம்பலையும் நீர்நிலையில் கரைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மனைவி அனுராதாவை அவரது தந்தை கொலை செய்து விட்டதாக லட்சுமணன் போலீஸில் புகார் அளித்தார். சத்தேசனாவும், அவரது உறவினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் சமீபத்தில் இதேபோன்ற ஜாதி ஆணவப் படுகொலை சம்பவம் நடந்தது. தனது மகள் அம்ருதாவை தலித் சமூக இளைஞர் பிரணய் குமார் திருமணம் செய்து கொண்டதால்  அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மாருதி ராவ் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in