ஒரேநாளில் 3 நிகழ்ச்சிகள்: ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு: ராகுல் காந்தி பங்கேற்பு

ஒரேநாளில் 3 நிகழ்ச்சிகள்: ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு: ராகுல் காந்தி பங்கேற்பு
Updated on
2 min read

காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.

இந்த 3 பதவி ஏற்புவிழாவிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்தக் கட்சிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அங்கு முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். ஜெய்ப்பூரில் இன்று காலை 10.மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

அதன்பின் நண்பகல் ஒரு மணிக்கு மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வராக பூபேந்திர பாஹெல் முதல்வராக பதவிஏற்கிறார். போபாலில் இருந்தவாறே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

ஒரே நாளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 முதல்வர்களும் பங்கேற்க இருப்பதால், அந்த கட்சியினர் பெரும் பரபரப்பும், உற்சாகமும் கிளம்பியுள்ளது.

இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூப் அப்துல்லா, பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் முக்கிய விருந்தினராக, ராஜஸ்தானில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சஞ்சய் சிங் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இரு துருவங்களாக அரசியலில் செயல்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் விழாவில் பங்கேற்பது 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு வித்தாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் தினேஷ் திரிவேதி, மத்தியப்பிரதேச முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார். இதுதவிர புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

சத்தீஸ்கரின் ராய்பூரில் இன்று மாலை நடக்கும் பதவி ஏற்பு விழாவில், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in