Published : 29 Dec 2018 07:53 AM
Last Updated : 29 Dec 2018 07:53 AM

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தி னார். அதில், 2022-ம் ஆண்டுக் குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதலா கவே ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்துக் கான மதிப்பீட்டினை மத்திய அரசிடம் இஸ்ரோ அண்மையில் சமர்ப்பித்தது. அதன்படி, இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ககன்யான் திட்டத்தின் கீழ், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப் படவுள்ளனர். இதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் பயன் படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, இரண்டு முறை ஆளில்லா விண்கலங்கள் பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், 7 நாட்கள் வரை அங்கு தங்கியிருப்பார்கள். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இத்திட்டம் பெரிதும் பயன்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ககன்யான் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். இதற்கு முன்பாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x