

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி கற்பக விருட்ச வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 4-ம் நாளான நேற்று காலை, உற்சவரான மலையப்பர், தேவி, பூதேவி சமேதமாய் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் வாகன சேவைக்கு முன்பு பல்வேறு மாநில நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். இந்த வாகன சேவை யில் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர் கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மதியம் திருமஞ்சன சேவைகளும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பின்னர் இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று கருட சேவை
பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாகக் கருதப்படும் கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளது. இதனைக் காண்பதற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் பாது காப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருட சேவையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து திருப்பதி-திருமலை இடையே மோட்டார் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை மதியம் 2 மணிவரை அமலில் இருக்கும்.
கருட சேவை இரவு 8 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற உள்ளது. இதற் காக 27 வழிகள் மார்க்கமாக, மாட வீதிக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி நகர எஸ். பி. கோபிநாத் ஜெட்டி நேற்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.