சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் யார்? பூபேஷ் பகேலுக்கு அதிக வாய்ப்பு

சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் யார்? பூபேஷ் பகேலுக்கு அதிக வாய்ப்பு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனிமெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதன் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 65, பாஜக 15, அஜித் ஜோகி மற்றும் மாயாவதி கூட்டணி 9 இடங்கள் பெற்றுள்ளன. எனவே, காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்துள்ளது. ஆனால், காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு நான்கு தலைவர்கள் போட்டியில் உள்ளனர்.

இவர்களில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவரது தலைமையில் அக்கட்சி தேர்தலைச் சந்தித்தது. தற்போதைய எம்எல்ஏவான பகேல், 2013-ல் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்குப் பின் காங்கிரஸின் முக்கியத் தலைவரான முன்னிறுத்தப்பட்டார்.

ஏனெனில், அந்தத் தாக்குதலில் காங்கிரஸின் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் வருடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிந்தது. அப்போது ம.பி.யின் முதல்வராக இருந்த திக்விஜய்சிங் அமைச்சரவையிலும் பகேல் உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு சத்தீஸ்கரின் முதலாவது முதல் அமைச்சராக அமர்ந்த அஜித் ஜோகியுடனும் பகேல் அமைச்சராக இருந்தார். 2003 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சியில் பகேல், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இரண்டாவது வாய்ப்பு காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவரான டி.எஸ்.சிங் தியோவிற்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர் பாஜகவின் முதல்வராக இருந்த ராமன்சிங் மீது பல்வேறு பிரச்சினைகளில் ஆதரவளிப்பதாக புகார் இருந்தது.

சத்தீஸ்கரின் துர்க் தொகுதியின் மக்களவைத் தொகுதி எம்.பி.யான தம்ரத்வாஜ் சாஹுவின் பெயரும் முதல்வர் பட்டியலில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரால் அவரது சமூக வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்ததாகக் கருதப்படுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவராகவும் சாஹு உள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவரும் ம.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சரண் தாஸ் மஹந்த் பெயரும் முதல்வர்களுக்கான போட்டியில் உள்ளது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் மஹந்த் இருந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in