

உ.பி.யின் புலந்த்ஷெஹரில் நேற்று நடைபெற்ற பசுவதைக் கலவரம் மீது பல்வேறு தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதே மாவட்டத்தில் நடைபெற்ற முஸ்லிம்களின் இஸ்திமாவை (முஸ்லிம்களின் மதப்பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்)) குறிவைத்து மதக் கலவரத்தைத் தூண்ட இந்துத்துவாவினரால் திட்டமிடப்பட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது.
புலந்த்ஷெஹர் நிர்வாகம் சார்பில் முதல் அதிகாரியாக விசாரணை நடத்திய ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மஹாவ் கிராமத்தின் கரும்பு வயலில் இறந்த மாட்டின் உடல் தொங்கவிடப்பட்டிருந்தது. அருகில் பலவற்றின் எலும்புகள் பரவிக் கிடந்தது. வெகுதூரத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது. உ.பி.யில் நிலவும் சூழலில் இப்படி வெளிப்படையாக எவரும் மாட்டைக் கொல்லத் துணிவார்களா என வியப்பாக உள்ளது'' எனத் தெரிவித்தார்.
அதேபோன்று, அங்கு மாடுகளின் தகவல் கிடைத்த சில நிமிடங்களில் இந்து யுவவாஹினி, சிவசேனா மற்றும் பஜ்ரங்தளம் ஆகிய இந்துத்துவா அமைப்பினர் சம்பவ இடத்தில் போராடக் கூடியதாகவும் ராஜ்குமார் விசாரணையில் அறிந்ததாகக் கூறியுள்ளார். பிறகு அந்த இறைச்சியை டிராக்டரில் போட்டுக்கொண்டு அருகிலுள்ள புலந்த்ஷெஹர்-கடுமுக்தேஷ்வர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்தக் கிளம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சம்பவம் குறித்து கிராமத்தினரால் போலீஸுக்கும் 100 எண்ணில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதனால், மிக அருகிலுள்ள சிங்ராவதி போலீஸ் சாவடியில் இருந்த போலீஸார் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்(47) தலைமையில் அங்கு வந்து டிராக்டரை மறித்துள்ளனர். பிரச்சனையை கிராமத்திலேயே முடிக்க சுபோத் செய்த முயற்சி அவரது உயிரையே பலி வாங்கி உள்ளது.
சுபோத்தின் முயற்சிக்கு இடமளிக்காமல் இந்துத்துவா கும்பல் கிராமத்தினருடன் சேர்ந்து போலீஸாருடன் மோதியதால் கலவரம் வெடித்துள்ளது. சம்பவம் நடந்த இடமும், நேரமும் மதக் கலவரம் நடத்த இந்துத்துவாவினரால் திட்டமிடப்பட்டதாக இருக்கும் என உ.பி. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில், புலந்த்ஷெஹரில் நடந்த மூன்று நாள் இஸ்திமாவின் கடைசி நாளாக நேற்று இருந்தது. இதில், சுமார் பத்து லட்சம் முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்த இஸ்திமா வருடந்தோறும் பல ஆண்டுகளாக புலந்த்ஷெஹரில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாட்டு எலும்புகள் இருந்த கரும்பு வயலின் உரிமையாளர் பிரேம்ஜித்சிங் கூறும்போது, ''சிங்ராவதி சாவடியில் எப்ஐஆர் போடப்பட்டு பிரச்சினை முடிவிற்கு வந்த நிலையிலும் பஜ்ரங் தளத்தினர் டிராக்டரை நகர்த்தாது திட்டமிடப்பட்ட ஒன்று எனத் தெரிகிறது. கலவரம் தூண்ட கற்களை எறிந்ததும் எங்கள் கிராமத்தினர் அல்ல'' எனத் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் இஸ்திமாவில் இருந்து திரும்பும் முஸ்லிம்களின் உள்ளிட்ட வாகனங்களை மறிப்பதன் மூலம் அங்கு மதக்கலவரம் உருவாக்கலாம் என திட்டமிட்டு இந்தச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை இந்துத்துவாவினர் மறுக்கின்றனர்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் புலந்த்ஷெஹரின் பாஜக எம்.பி.யான போலாசிங் கூறும்போது, ''முற்றிலும் தவறான இந்தத் தகவலால். எங்கள் கட்சியின் பெயருக்கு களங்கப்படுத்தும் சதி இது. வழக்குப் பதிவு செய்ய மறுத்தவர்களை எதிர்த்து கிராமத்தினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அதற்காக அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் கலவரம் மூண்டது. கிராமத்தினர் எவரிடமும் துப்பாக்கிகள் இல்லை'' எனத் தெரிவித்தார்.