Last Updated : 02 Dec, 2018 02:18 PM

 

Published : 02 Dec 2018 02:18 PM
Last Updated : 02 Dec 2018 02:18 PM

ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் இல்லை: பாஜக தலைவர் விஜய்வர்கியா விளக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசுக்கு இப்போதைக்கு ஏதும் சிக்கவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிசத், ஆர்எஸ்எஸ் அமைப்பு, சிவசேனா உள்ளிட்டவை வலியுறுத்தி வருகின்றனர். பாஜகவும் கடந்த தேர்தலின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.

ஆனால், அயோத்தி நிலம் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான முடிவும் எடுக்காமல் மத்திய அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து, ராமர் கோயில் கட்ட அவசரச்சட்டம் கொண்டு வர வலியுறுத்திக் கடந்த வாரம் அயோத்தியில் விஎச்பி சார்பில் தர்ம சபா கூட்டம் நடத்தப்பட்டது. சிவசேனா கட்சியும் தனியாகக் கூட்டம் நடத்தி ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதனால், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் ராமர் கோயில் கட்டுவது குறித்து அவசரச்சட்டம் ஏதும் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதகுறித்து பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கொல்கத்தாவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை.

அதேசமயம், அயோத்தியி்ல ராமர் கோயில் கட்டும் துணிச்சல் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ராமர் கோயில் விவகாரத்தைத் திசைதிருப்பி சிறுபான்மையினர் வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற முயல்கின்றனர்.

அதேசமயம், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் மக்களின் எண்ணம் சாதகமாக இருந்தால், ஆதரவு அதிகரித்தால் அவசரச்சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசிப்போம். ஆனால், இப்போது அவசரச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை.

தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் பாஜக ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பியதில்லை, ராமர் கோயில் விவகாரத்தை அரசியல் செய்யவும் மாட்டோம். எங்களின் நோக்கம் கூட்டுழைப்பு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தத்துவம்தான்.

இவ்வாறு விஜய் வர்க்கியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x