Last Updated : 31 Dec, 2018 03:50 PM

 

Published : 31 Dec 2018 03:50 PM
Last Updated : 31 Dec 2018 03:50 PM

முத்தலாக் தடை மசோதாவால் அமளி: மாநிலங்களவை ஜன.2-க்கு ஒத்திவைப்பு; தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

முத்தலாக் தடை மசோதாவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவை ஜனவரி 2-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நண்பகலுக்குப் பின் மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்த நிலையில், தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா கடந்த 17-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு. கடந்த 27-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் சில அம்சங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து முத்தலாக் தடை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று பிற்பகலுக்கு பின் தாக்கல் செய்யப்பட இருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் நாடாளுமன்ற சேம்பர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முத்தலாக் தடை மசோதா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாதிக் கட்சியின் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெஹ்ரீக் ஓ பிரையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, கேரள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோஸ் கே மாணி உள்ளிட்ட12 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் முத்தலாக் தடை சட்டமசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க  வேண்டும் என்று வலியுறுத்தினர்.மேலும், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவையும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தின.

மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிற்பகலில் முத்தலாக் தடைசட்ட மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தாக்கல் செய்தபின் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வுசெய்ய வலியுறுத்திக் கோஷமிட்டனர். இதனால், அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் அவை கூடியபின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் “ இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை மேலும் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும். இந்த அவையில் உள்ள பெரும்பாலான கட்சிகள் முத்தலாக் தடை சட்டமசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசிக்க வலியுறுத்திள்ளனர். ஒரு மசோதா சட்டமாவதற்கு முன் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்கும் நடைமுறையை மத்திய அரசு மீறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், “ இந்த மசோதாவை மக்களவையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரித்துள்ளநிலையில், இப்போது இரட்டை வேடம் போடுகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மற்ற கட்சிகளும் சேர்ந்து அரசியல் செய்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் உரிமையை மீட்டெடுக்கும் சட்டமாகும் “ எனத் தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா, “ யார் முத்தலாக் மசோதாவை எதிர்க்கிறார்கள், இதை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசனை செய்யக்கோருகிறோம்” என்றார். இதனால், மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கூச்சலிட்டதால் அமளி நிலவியது.

துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பேசுகையில், “ நான் இந்த அவையை நடத்த விரும்புகிறேன். நாளை விடுமுறை என்பதால்,அவையை இன்று நடத்த விட வேண்டும்” என்றார். ஆனால், தொடர்ந்து எம்.பி.க்கள் கூச்சலிடவே, அவையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x