

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தன்னை பாகிஸ்தான் அனுப்பி வைத்தார் என கூறியிருந்த பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தற்போது அப்படி கூறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
சீக்கியர்கள் புனிதத்தலமான கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சென்றதிலிருந்தே சர்ச்சைகள் பல கிளம்பி வருகின்றன.
காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது முதல் இம்ரான் இவரை இந்தியாவின் பிரதமர் ஆகவேண்டும் என்று கூறியது வரை, இவர் இம்ரான் கானை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது என்று சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போனது.
தன்னைப் பாகிஸ்தானுக்கு கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சிகாக அனுப்பியதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று நவ்ஜோத் சித்து நேற்று விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் சென்றது முதல் சித்து மீதான விமர்சனம் தற்போது காங்கிரஸ் மீதும் எழுந்துள்ளதால் கட்சி தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சித்து திடீர் பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘ஒருவரை பற்றி அவதூறு கிளப்பும் முன்பு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் செல்லும்படி ராகுல் காந்தி என்னிடம் கூறவே இல்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழைப்பின் பேரிலேயே நான் பாகிஸ்தான் சென்றேன் என்பது ஒட்டுமொத்த உலகுக்கே தெரியும்’’ எனக் கூறியுள்ளார்.