Published : 08 Sep 2014 01:28 PM
Last Updated : 08 Sep 2014 01:28 PM

காஷ்மீரில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு

ஜம்மு - காஷ்மீரில் மோசமான வானிலை தொடர்வதால், வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 175-ஆக அதிகரித்துள்ளது.

தொலைத்தொடர்புகள் துண்டிப்பு

வெள்ளம் சூழ்ந்துள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பல்வேறு இடங்களில் வீட்டுக் கூரைகள் மீதும், கட்டிடங்கள் மீதும் மக்கள் தவித்து வரும் நிலையில், இந்திய கடற்படை திங்கள்கிழமை முதல் முறையாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புப் படையினர் இதுவரை தெற்கு காஷ்மீரில் 22,000 பேரை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மீட்புப் பணியில் இந்திய கடற்படை வீரர்கள்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தற்போது இந்திய கடற்படை வீரர்களும் இணைந்துள்ளனர். ஏற்கெனவே ராணுவமும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் இன்று நடைபெற்று வரும் மீட்புப் பணியில், ஸ்ரீநகர் - சோபூர் நெடுஞ்சாலையில் சிக்கியிருந்த 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு - காஷ்மீரில் வெள்ள நிவாரணப் பணியில் முதன்முறையாக கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஹைகோன் பகுதியில் இருந்து சிலரை மீட்டுள்ளனர்.

தற்போது ஸ்ரீநகரின் பன்தா சவுக் பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. புது டெல்லி, மும்பை, விசாகபட்டினத்தில் உள்ள கடற்படை வீரர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். தேவைப்பட்டால் அவர்களையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளோம்" என்றார்.

அனந்தநாகில் நிவாரண முகாம்:

அவந்திபூர், அனந்தநாக் பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரில் வானிலை ஓரளவு சீராக இருப்பதால், அங்கு மீட்புப் பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன.

வானம் மேகமூட்டமில்லாமல் இருப்பதால் மீட்புப் பணியில் நிறைய ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அனந்தநாக் மாவட்டத்திற்கு மருத்துவ குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிப்பு

சற்றும் குறையாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை துரிதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரில் 25 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை படகுகள் உதவியுடன் 5,183 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், ஆயிரக்கணக்கானோர் அங்கு சிக்கியுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கண்டோன்மெண்ட், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் ஆகிய முக்கிய அரசு கட்டிடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

மீட்புப் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க உத்தம்பூர் மாவட்டம் பசோரி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவம் விரைந்துள்ளது.

மீட்புப் பணிகள் குறித்து டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை தலைவர் ஓ.பி.சிங் கூறியதாவது: "மாநிலத்தில் தொலைதொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், களத்தில் உள்ள மீட்புக் குழுவினருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க மீட்புக் குழுவினருக்கு சுமார் 500 சாட்டிலைட் தொலைபேசிகளை வழங்கியிருக்கிறோம்.

சில இடங்களில் தண்ணீரில் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்புக் குழுவினர் நெருங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. மாநிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொண்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். குழந்தைகள், பெண்கள் உள்பட 5,183 பேரை இதுவரை மீட்டிருக்கிறோம். 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

காஷ்மீரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்துக்கு சிறப்பு நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x