

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 114 இடங்களுடன் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் வைத்துள்ள மாயாவதியும், ஒரு இடம் வைத்துள்ள சமாஜ்வாதியும் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் பெரும்பான்மையாக 117 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 114 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 109 இடங்களைப் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை உறுப்பினர்கள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும் அதே சூழலில், பாஜகவும் உரிமை கோர உள்ளதாகத் தகவல் வெளியானது.
பாஜக ஆட்சி அமைவதைத் தடுப்போம்
இந்நிலையில், பாஜகவை ஆட்சியில் அமர்வதைத் தடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று அறிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் பாஜகவை ஆட்சிஅமைப்பதைத் தடுக்க இந்த முடிவை எடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கும், எங்களுக்கும் கொள்கை ரீதியாகச் சிலமுரண்பாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி ஆதரவு அளிக்கிறோம்.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இடங்களை நாங்கள் பெறவில்லை. மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு குறுக்கு வழிகளைப் பின்பற்ற வாய்ப்புள்ளதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். தேவைப்பட்டால், ராஜஸ்தானிலும் பாஜகஆட்சியில் அமர்வதைத் தடுக்கும் வகையில், அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் “ எனத் தெரிவித்தார்.
ராஜினாமா
இதற்கிடையே போபால் நகரில் இன்று நிருபர்களைச் சந்தித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “மாநிலத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க இயலாது. ஆதலால், எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். ஆளுநரைச் சந்தித்து எனது கடிதத்தை அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், 114 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.