

காஷ்மீரில் கடும் பனியும் குளிரும் நிலவுகிறது. லே பகுதியில் மைனஸ் 17.1 டிகிரி செல்சியஸாக வெப்ப நிலை குறைந்தது.
காஷ்மீரில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் குளிர் உள்ளது. லே பகுதியில் வெப்பநிலை மைனஸ் 17.1 டிகிரி செல்சியஸாக குறைந்தது. ஸ்ரீநகரில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 6.8 டிகிரி செல்சியஸாக இருந்தது.
சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் வெப்பநிலை மைனஸ் 9.4 டிகிரியாகவும் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் மைனஸ் 7.9 டிகிரியாகவும் இருந்தது. கடும் பனி காரணமாக ஸ்ரீநகரின் புகழ் பெற்ற தால் ஏரியின் ஓரங்களில் தண்ணீர் உறைந்தது.
வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் உறைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடும் குளிர் காரணமாக காலை வெகுநேரமாகியும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.