Last Updated : 04 Dec, 2018 10:57 AM

 

Published : 04 Dec 2018 10:57 AM
Last Updated : 04 Dec 2018 10:57 AM

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் அலையும் காளை மாடுகளைக் கட்டுப்படுத்தவும், காளை மாடுகள் பிறப்பை குறைக்கும் வகையிலும், இனி பசுக்களுக்க பசு கன்று மட்டும் பிறக்கும் வகையில் பரிசோதிக்கப்பட்ட விந்தணுக்களை செலுத்தும் திட்டத்தை தயாரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பசு மாடுகளுக்கு விந்தணுக்கள் செலுத்தப்படும் முன், அதில் காளை மாடுகள் பிறக்கும் சாத்தியமுள்ளவை பிரித்து தனியாக எடுக்கப்பட்டு, பசு கன்றுகள் பிறக்கும் சாத்தியமுள்ளவை மட்டுமே செலுத்தப்படும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு உதவாத காளை மாடுகள் பிறப்பை கட்டுப்படுத்த முடியும் என்று உ.பி. அரசு நம்புகிறது.

உ.பி.யில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே அந்த மாநிலத்தில் பசுமாடுகளைக் கொல்வதற்கு தடையும், அங்கீகாரம் இல்லாத கடைகளில் மாட்டிறைச்சி விற்கவும் தடை இருக்கிறது. இப்போது, காளை மாடுகள் பிறப்பை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

“பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட விந்தணுக்கள்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு உ.பி. அரசு நேற்று முறைப்படி அனுமதி வழங்கியது.

உ.பி.யி உள்ள இத்வா, லட்சுமிபூர் கேரி, பாரபங்கி ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கப்பட்டதில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் ஏறக்குறைய 90 முதல் 95 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளதால், இந்தத் திட்டத்தை மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து உ.பி. அரசின் செய்தித்தொடர்பாளர் சிறீகாந்த் சர்மா கூறியதாவது:

 சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியதில் 581 பசுக்களுக்கு விந்தணுக்களைச் செலுத்திப் பார்த்ததில், 522 பசுக்களுக்குப் பசு கன்றுகள் பிறந்துள்ளன .ஏறக்குறைய 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், இந்தத் திட்டத்துக்கு அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

மாநிலத்தின் பாரம்பரிய பசு ரகங்களான சாஹிவால், கிர், ஹர்யான்வி, தார்பார்கர், கங்காத்ரி ஆகிய பசுக்கள் இனப்பெருக்கம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர் ரூ.300 செலுத்திப் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே பசுக்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தி, உற்பத்திக்கு உதவாத காளை மாடுகள் எண்ணிக்கையைக் குறைப்பதுதான். அடுத்த 4 ஆண்டுகளில் சாலைகளில் அனாதையாக அலையும் காளைகள் குறைந்துவிடும். காளை மாடுகள் பெருக்கத்தை குறைப்பதன் மூலம் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவது தடுக்கப்படும், சாலைகளில் திரியும் போது ஏற்படும் விபத்துக்களும் குறையும். இவ்வாறு சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x