

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக (IISc) சோதனைக்கூடத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி வெடிவிபத்தில் 30 வயது ஆய்வாளர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 2.20 மணியளவில் சோதனைக் கூடத்தில் உள்ள சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 4 ஆய்வாளர்களும் சூப்பர்வேவ் டெக்னாலஜி பிரைவேட் லிட். ஐ-ச் சேர்ந்தவர்கள்.
நெருப்பு, எரிவாயு என்று எதுவும் இல்லாமல் ஏற்பட்ட ஷாக்வேவ் வெடிவிபத்தாகும் இது. வெடிப்பு ஏற்பட்டவுடன் மனோஜ்குமார் சுவரில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். அதுல்யா, கார்த்திக், நரேஷ் குமார் ஆகியோர் படுகாயமடைய ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த இந்திய அறிவியல் கழக அதிகாரிகள், வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தங்களால் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை என்று தெரிவித்தனர். சோதனைக்கூடத்தில் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு சிதறிக்கிடந்தன. ஆனால் நெருப்பு, எரிவாயு சாயல் எதுவும் இல்லை. ஆனால் வெளியான ஆற்றல் ஒருவரை அந்த இடத்திலேயே கொல்லப் போதுமானது என்று தெரிவித்தனர்.
சதாசிவ நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.