கொச்சி கடற்படைத் தளத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துமிட நகரும் கதவு விழுந்து இரண்டு வீரர்கள் பலி

கொச்சி கடற்படைத் தளத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துமிட நகரும் கதவு விழுந்து இரண்டு வீரர்கள் பலி
Updated on
1 min read

கொச்சி கடற்படைத்தளத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நிறுத்திவைக்கப்படும் இடத்தின் நகரும் கதவு ஒன்று உடைந்து விழுந்ததில் இரண்டு வீரர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

கொச்சியில் உள்ள சதர்ன் நேவல் கமாண்டின் ஐ.என்.எஸ்.கருடா ஹெலிகாப்டர் நிறுத்துமிட நகரும் கதவு வியாழன் காலை திடீரென உடைந்து விழுந்தது, அதில் நவீன் (28), அஜித் சிங் (29) ஆகியோர் உடல் நசுங்கியது, இவர்கள் இருவரும் உடனடியாக கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி வியாழன் காலை 9.40 மணியளவில் பலியாகினர்.

ஏ.எல்.எச் துருவ் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும் கட்டிடத்தின் நகரும் கதவு அதனைத் தாங்கும் பிடிமானத்திலிருந்து நழுவி இரண்டு வீரர்கள் மேல் விழுந்தது. இருவரும் உயரதிகாரிகள் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்று கடற்படை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பலியான நவீன் ஹரியாணா பிவானி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஜனவரி 25, 2008-ல் கடற்படையில் சேர்ந்தார். மற்றொரு வீரரான அஜீத் சிங் ராஜஸ்தான் மாநில பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 29, 2009-லிருந்து கடற்படையில் பணியாற்றி வந்தார்.

நவீனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 2 வயது மகளும் உள்ளனர், அஜீத் சிங்கிற்கு பார்வதி என்ற மனைவியும் 5 வயது மகனும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹெலிகாப்டர்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

விசாரணைக்குப் பிறகுதான் எப்படி அந்த நகரும் கதவு உடைந்து விழுந்தது என்பது தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in