

தேச வளர்ச்சிக்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தும்கூரில், ஒருங்கிணைக்கப்பட்ட உணவுப் பூங்காவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
விழாவில் மோடி பேசியதாவது:
"தேச வளர்ச்சிக்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கட்சிப் பாகுபடுகளைக் கடந்து அனைத்து மாநில முதல்வர்களும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றினால் தேசத்தின் பொருளாதார நிலையை உயர்த்தலாம். வெவ்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும், தேசம் ஒன்றே.
சில மாநிலங்கள், மத்திய அரசுடன் விரோதம் பாராட்டுகின்றன. இது தொடர்ந்தால் நாட்டுக்கு அது நல்லதல்ல. மத்திய அரசுடன் மாநில அரசுகள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். கட்சி பாகுபாடுகளைக் கடந்து அனைத்து மாநில முதல்வர்களின் நம்பிக்கையையும் நான் நிச்சயம் பெறுவேன். கூட்டாட்சியின் மகத்துவத்தை நிலைநாட்டுவேன்" என்றார்.
முதல்வர் பங்கேற்பு:
மகாராஷ்டிராவில் அரசு விழா நடந்தபோது அம்மாநில முதல்வர் பிருதுவிராஜ் சவானும், ஹரியானா நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவும் பாஜக தொண்டர்களால் அவமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் பங்கேற்கும் விழாவில் காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி முடிவு செய்திருந்தது.
ஆனால், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.