5 மாநிலங்களின் ஒத்துழைப்புடனேயே கங்கை நதியை சுத்தம் செய்ய முடியும்: மத்திய அரசு

5 மாநிலங்களின் ஒத்துழைப்புடனேயே கங்கை நதியை சுத்தம் செய்ய முடியும்: மத்திய அரசு
Updated on
1 min read

கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டத்திற்கான 3 கட்ட செயல் திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பித்ததையடுத்து நீதிபதிகள் மேலும் கேள்விகள் எழுப்பினர்.

கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்தின் மத்திய அரசின் கடப்பாட்டை அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திடம், 5 மாநிலங்களின் ஒத்துழைப்பு, மக்கள் ஒத்துழைப்பு இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கங்கை நதியைச் சுத்தம் செய்ய மத்திய அரசு 10 ஆண்டுகளில் 3 கட்ட செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் நீதிபதிகள் டி.எஸ்.தாகுர், மற்றும் ஆர்.பானுமதி இன்று மத்திய அரசிடமிருந்து கங்கை நதியை சுத்தம் செய்தல் பற்றி திட்டவட்டமான செயல் நடவடிக்கைகளைக் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் கங்கை நதி ஓடும் உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளை மறந்து இந்தப் பணியில் ஒத்துழைப்பு நல்குவதைப் பொறுத்தே அத்திட்டத்தின் செயல்முறைகளை விளக்க முடியும் என்று கூறியது.

“படிப்படியாக சுத்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படிச் செய்கிறீர்கள் என்பதை உச்ச நீதிமன்றம் சரிபார்க்க வேண்டியுள்ளது, நீங்கள் விரும்பினால் அடுத்த ஓராண்டுக்கு உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை, அக்டோபர் 2015-ல் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவியுங்கள், உங்களின் உறுதிமொழி தேவை” என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், “மத்திய அரசு உறுதி கொடுப்பதுடன் 5 மாநில அரசுகளும் இதில் ஒத்துழைக்க உறுதியளிக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்குவோம், ஆனால் மூலையில் உள்ள ஒருவர் எங்கள் திட்டத்தை வீணடிக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

இதற்கு மறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நீங்கள் கூறிய 5 மாநிலங்களிலும் உங்கள் கட்சி ஆட்சி செய்யவில்லை. எனவே அந்த மாநில அரசுகள் உங்கள் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமா?” என்றனர்.

கங்கை நதியை சுத்தம் செய்ய உத்தேசமாக ரூ.51,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in