

வங்கிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என நேற்று மக்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். சிவசேனாவின் உறுப்பினர் பாவ்னா காவ்லி பாட்டீல் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்து மூலம் பதிலளித்தார்.
தனது பதிலில் மத்திய இணை அமைச்சர் ரூபாலா கூறும்போது, ''விவசாயிகளுக்காக பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டங்கள் எதிவும் தற்போது மத்திய அரசிடம் இல்லை'' எனத் தெரிவித்தார்.
இதுபோல், தள்ளுபடி செய்வது ஏற்கெனவே கடன் பெற்று வங்கிகளில் அதை சரியாகத் திருப்பிச் செலுத்தி வரும் கலாச்சாரத்தைப் பாதிக்கும் எனவும் அமைச்சர் ரூபாலா தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன் வெளியான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை இழந்திருந்தது. இதற்கு அங்குள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யாததும் முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இந்த மூன்று மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடன் சுமார் 45,000 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களையும் சேர்த்து இந்தக் கடன் தொகை பல லட்சம் கோடிகள் மதிப்புடையதாக உள்ளது.
இதற்காக, விவசாயிகள் பல ஆண்டுகளாக தங்கள் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நவம்பர் 30-ல் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைக்களை வலியுறுத்தி பெரிய அளவில் டெல்லியில் போராட்டம் நடத்தி இருந்தனர்.
மக்களவையில் மத்திய விவசாயத்துறையின் பதிலால் மூன்று மாநில தோல்விக்கு பிறகும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை எனக் கருதப்படுகிறது. அரசின் இந்த நிலைப்பாட்டால் மக்களவைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.