

பிஹாரில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக சுஷில் குமார் மோடியை முன்னிறுத்த அக்கட்சியின் மாநில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணி முறிவதற்கு முன்பாக அம்மாநில துணை முதல்வராக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தவர் சுஷில்குமார் மோடி. தொடக்கத்தில் பாஜக சார்பில் நரேந்தர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது எதிர்ப்பு தெரிவித்த வர்களில் இவரும் ஒருவர். அதிகாரப் பூர்வமாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரடுன் நெருக்கத்தை வளர்த்து கொண்டார்.
இந்நிலையில் வரும் பிஹார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சுஷில் குமார் மோடியை முன்னிறுத்த பாஜகவின் முக்கிய தேசிய நிர்வாகிகள் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அவரது பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சி.பி.தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேசிய கட்சியான பாஜகவின் முக்கியமான முடிவுகளை அதன் ஆட்சிமன்றக்குழு எடுக்கும். இது தனி ஒருவரின் முடிவாக இருக்காது. குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஆலோசித்து முடிவு செய்வார்கள். அதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக யாருடைய பெயரையும், யாரும் கூறுவதில் அர்த்தம் இல்லை” என்றார்.
கடந்த 1990 முதல் தொடர்ந்து கயா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரேம் குமார், “இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்காத நிலையில் அந்தப் பதவிக்காக ஒரு குறிப்பிட்ட பெயரை அறிவிப்பது அல்ல” என கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்களைப் போல், சுஷில்குமார் மோடியை எதிர்ப்பவர்கள் பட்டியலில் எம்.எல்.சி. ஹரிந்திரா பிரதாப், முன்னாள் மாநில அமைச்சர் சந்திர மோகன் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே பிஹார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விரும்புகிறார்கள் என கருதப்படுகிறது.