Published : 31 Dec 2018 12:12 PM
Last Updated : 31 Dec 2018 12:12 PM

மக்களே உருவாக்கிய தேர்தல் அறிக்கை: போட்டியிடுபவரிடம் பாண்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கும் கிராமவாசிகள்

தேர்தல் அறிக்கைகள்- மக்களுக்காக அரசியல் கட்சிகளால் வெளியிடப்படுபவை. ஆனால் காலப் போக்கில் அவற்றை மக்களும் மறந்துவிடுகின்றனர். அரசியல் கட்சிகளும் மறந்து விடுகின்றன.

ஆனால் தெலங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டலில் உள்ள சிறிய கிராமமான லக்‌ஷ்மி நகரில் மக்களே தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளனர்.

210 வீடுகளுடன் 1,200 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மக்களுக்குத் தேவைப்படும் திட்டங்களை, தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைக் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையாகத் தயாரித்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் கிராமத்துக்குத் தேவையான பாசன வசதிகள், சுகாதாரப் பிரச்சினைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவைப்படும் மருத்துவ வசதிகள், சாலை, தெரு விளக்கு, குடிநீர் தேவைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரும் ஐடி பணியாளருமான பெண்ட்யாலா பிரசாத், ''100 ரூபாய் பாண்ட் பேப்பரின் படத்தை ஒரு தாளில் பதிக்கிறோம். அதில் போட்டியிடுபவரையும் வாக்காளர்களையும் கையெழுத்திடச் செய்கிறோம். இது சட்டரீதியாகச் செல்லாவிட்டாலும், தார்மிக ரீதியில் போட்டியாளர்களின் மனதில் இருக்கும்'' என்றார்.

அந்த 'பாண்ட்' பேப்பரில், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து அலுவலகத்தில் தினசரி 2 மணி நேரமாவது செலவிட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை வார்டு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச வேண்டும். சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு  3 மாதங்களுக்கு ஒருமுறை சுகாதார முகாம் அமைக்க வேண்டும்.

மோசமான சாலைகளைச் சீரமைக்க வேண்டும். கிராமத்தில் உள்ள அரிசி ஆலைகளால் ஏற்படும் தூசி காரணமாக சருமப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் கிராமவாசிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

''12 பக்க மக்கள் தேர்தல் அறிக்கையையும் பாண்ட் பேப்பரையும் பிரதி எடுத்து அனைத்து வீடுகளுக்கும் வழங்கி வருகிறோம். இதன்மூலம் எங்களின் கிராமம் முன்னேற வேண்டும்'' என்கிறார் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x