Last Updated : 24 Dec, 2018 07:01 PM

 

Published : 24 Dec 2018 07:01 PM
Last Updated : 24 Dec 2018 07:01 PM

உலகின் மிகப்பெரிய கட்சிகளுள் பாஜக-வும் ஒன்று; வாஜ்பாய் செங்கல் செங்கலாகக் கட்டியெழுப்பிய கட்சி: பிரதமர் மோடி உரை

மறைந்த பிரதமர் வாஜ்பாய் நினைவை போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டு உரை நிகழ்த்துகையில் வாஜ்பாய் எவ்வாறு நாட்டுக்காக சிந்தித்தார், செயல்பட்டார் என்று புகழ்மாலை அணிவித்தார்.

 

மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

 

இன்றைய அரசியல் நிலவரம் எப்படி உள்ளது என்றால், அதிகாரம் இல்லாமல் யாரேனும் 2 அல்லது 5 ஆண்டுகள் இருக்க நேரிட்டாலே அமைதியின்மையில் உழல்கின்றனர்.

 

சிலருக்கோ அதிகாரம் என்பது பிராணவாயு போன்றது.  அவர்களால் அதுவின்றி இருக்க முடியாது.  ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெரும்பாலான அரசியல் வாழ்க்கை எதிர்க்கட்சி இருக்கையில் அமர்வதாகவே இருந்து வந்துள்ளது. அவரோ தேசிய நலன்களுக்காக பாடுபட்டவர், கட்சியின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர்.

 

வாஜ்பாயைப் பொறுத்தவரையில் ஜனநாயகம்தான் உச்சபட்சம்.  அவர் ஜனசங்கத்தை கட்டிஎழுப்பினார். ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவர் ஜனதாகட்சிக்குச் சென்றார்.  அதே போல் அதிகாரமா அல்லது கட்சியின் கொள்கையா என்று வந்த போது ஜனதாவைத் துறந்து பாஜகவைத் தொடங்கினார்.

 

பாஜக வாஜ்பாயினால் செங்கல் செங்கலாக எழுப்பப்பட்ட ஒன்று. இன்று உலகின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக பாஜக திகழ்கிறது.  வாஜ்பாய் பேசினால் அது தேசம் பேசுவதாகும்.. அவர் பேசினால் தேசமே கவனிக்கும்.  வாஜ்பாயின் குரல் வெறும் கட்சியின் குரல் அல்ல, சாமானிய மனிதர்களின் ஆசைகள், விருப்பங்கள் ஆகும் அது.

 

பொதுவாழ்க்கையிலிருந்து உடல்நிலை காரணமாக அவர் 10 ஆண்டுகளாக விலகியிருந்தாலும் அவர் மறைவுக்கு பொதுமக்கள் காட்டிய இரங்கல், பிரியாவிடை  மக்கள் மனதில் அவருக்கு என்ன மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருந்தது என்று தெரிந்தது.

 

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x