

கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.
இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.