

டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பாஜக மீது புகார் கூறியுள்ளார். இதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் திங்கள்கிழமை வெளியிட்டார்.
டெல்லியில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜக வுக்கு, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்து, குடியரசுத் தலைவருக்கும் பரிந் துரை செய்துள்ளார்.
ஆட்சியமைக்க பாஜகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக கேஜ்ரிவால் புகார் கூறி யுள்ளார். இதற்கு ஆதாரமாக தம் கட்சியினரால் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட ரகசிய வீடியோ ஆதா ரத்தையும் அவர் வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் கேஜ்ரிவால் கூறியாதவது:
பாஜக துணைத் தலைவரான ஷேர் சிங் டாகர் மற்றும் ரகுவீர் தஹியா ஆகிய இருவரும் ரூ.4 கோடி கொடுத்து எங்கள் எம்எல்ஏ தினேஷ் மொஹனியாவை விலைக்கு வாங்க முயன்றனர். பாஜக குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைக்க முயல்வதை தேர்தல் ஆணையத்திடம் வீடியோ ஆதரத் துடன் புகார் அளிப்போம். நேர்மை யான எங்கள் எம்எல்ஏ.க்கள் விற் பனைக்கு அல்ல’ என்றார்.
வீடியோ ஆதாரம், உச்ச நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசா ரணையின் போது தாக்கல் செய் யப்படும் என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ, ஆம் ஆத்மி கட்சியின் இணைய தளம் மற்றும் ‘யூடியூபில்’ வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக மறுப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ போலியானது என பாஜக தெரிவித் துள்ளது. இரு தலைவர்களும் அந்த எம்எல்ஏவை சந்தித்தது உண்மை. ஆனால், பணம் தருவதாகக் கூறப்படுவது பொய்யான தகவல் என பாஜக கூறியுள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவரான விஜயேந்தர குப்தா கூறும்போது, ‘இதுபோல் பொய் யான புகார்களை கூறுவதே ஆம் ஆத்மி கட்சியினரின் வேலையாகி விட்டது. இதற்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது செய்த புகாருக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர். இப்போது, மீண்டும் பாஜகவுக்கு களங்கம் கற் பிக்க முயல்கின்றனர்.’ எனத் தெரி வித்தார்.
பின்னணி
கடந்த டிசம்பரில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருந்தது. 49 நாள் ஆட்சிக்கு பின் லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடிய வில்லை எனக்கூறி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதனால், பிப்ரவரி 15-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.