போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு: சபரிமலை செல்ல முயன்ற சென்னை பெண்கள் பம்பையோடு திரும்பினர்

போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு: சபரிமலை செல்ல முயன்ற சென்னை பெண்கள் பம்பையோடு திரும்பினர்
Updated on
2 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 50 வயதுக்குட்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண்கள் 11 பேர், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கினார்கள்.

பெண் பக்தர்கள் செல்ல கடும் எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்களை கேரள போலீஸார் கைது செய்தனர்.  பம்பையில் 6 மணிநேரம் பெரும் பரபரப்பாக இருந்த சூழல் முடிவுக்கு வந்தது.

சென்னையைச் சேர்ந்த “மனிதி” எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்றுச் சென்றனர். சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாகப் பம்பைக்கு இன்று காலை 5.30 மணிக்கு சென்றனர்.

 இந்த விஷயம் அறிந்ததும் பம்பையில் தமிழக பெண் பக்தர்களை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, தெரிவித்ததால் பதற்றம் அதிகமானது.

சென்னையில் இருந்து வந்த மனிதி அமைப்பைச் சேர்ந்த பெண்களுடன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலித் பிரிவைச் சேர்ந்த அம்மினி உள்ளிட்ட பெண்களும் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். தாங்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்காமல் செல்லமாட்டோம் என்று கூறி சாலையில் அமர்ந்தனர்.

பெண்கள் வந்திருப்பதை அறிந்து போராட்டக்காரர்கள் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் அமர்ந்து ஐயப்ப நாம ஜெபத்தைகூறத் தொடங்கியதால், பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து, நீலி மலைப்பாதையை மறித்து அமர்ந்திருந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயற்சித்தனர். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து நாபஜெபத்தை உச்சகரித் தொடங்கியதால் பதற்றம் அதிகமானது.

மண்டலபூஜை தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், லட்சக்கணக்கில் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ள நேரத்தில் இத்தகைய போராட்டம் போலீஸாருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

அதன்பின் மீண்டும் பெண்களுடன் போலீஸார் பேச்சு நடத்தி, நிலவும் சூழலை எடுத்துக்கூறினார்கள். ஆனால், பெண்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். போதுமான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை என்று போலீஸார் எழுதிக்கொடுத்தால் கலைந்து செல்கிறோம் என மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதையும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதையும் பார்த்த போலீஸார் சென்னை பெண்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அனுப்பிவைத்தனர். பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கல்லுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பாதுகாப்புடன் தமிழக எல்லைவரை பெண்களை கொண்டு செல்ல போலீஸார் முடிவு செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது, “ உயர் நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் உத்தரவுப்படி செயல்படுகிறோம். அந்த குழு இங்கு நிலவும் சிக்கல்களை கவனித்து உரிய முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் முடிவுக்கு ஏற்றார்போல் அரசு செயல்படும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in