

பசு வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக வன்முறை வெடித்ததில் போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இன்று பிற்பகலில் நடந்தது. முற்றிலும் வன்முறைக் களமாக மாறியுள்ள அப்பகுதிக்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர்.
புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி பல இந்து அமைப்புகளின் ஆர்வலர்கள் புளந்த்ஷா-சையனா சாலையில் ஏராளமாகத் திரண்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் மீது கற்களை வீசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இக்குழுக்களில் முக்கிய அங்கம் வகித்துள்ள இந்து யுவ வாஹினி மற்றும் பஜ்ரங் தள் செயற்பாட்டாளர்களும் வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். காவல் அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். அவ்வழியே செல்லும் எந்த வாகனத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து அவற்றைச் சேதப்படுத்தி வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஸ்யானா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சுபோத் சிங் நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் சுபோத் சிங் ரத்தம் பெருக்கெடுத்த நிலையில், அவுரங்காபாத் சமுதாய மருத்துவ மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அனுஜ் ஜாவும் இக்காவல்துறை உயரதிகாரியின் மரணத்தை உறுதி செய்தார்.