Last Updated : 01 Dec, 2018 09:35 AM

 

Published : 01 Dec 2018 09:35 AM
Last Updated : 01 Dec 2018 09:35 AM

எங்கள் பிள்ளைகளை விவசாயம் செய்ய விடமாட்டோம், நாங்கள்படும் துன்பமே போதும்: பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் வேதனை

விவசாயத்தைத் தொழிலாக எடுத்துச் செய்து நாங்கள் பட்ட துன்பமே போதும், எங்கள் பிள்ளைகளை விவசாயம் செய்யவிடமாட்டோம் என்று டெல்லியில் பேரணியில் பங்கேற்ற பல விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், விவசாயிகளின் பரம்பரையை பாதுகாருங்கள் என்று பல விவசாயிகள் நேற்று முழக்கமிட்டனர்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வேளாண் கடன் தள்ளுபடி, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றத்தைக் நோக்கி நேற்று விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். ஏறக்குறைய 200-க்கும்மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய இந்தப் பேரணியில் ஒரு லட்சம் விவசாயிகள் வரை நாடுமுழுவதிலும் இருந்து வந்திருந்து பங்கேற்றனர்.

அப்போது பேரணியின் போது, பல்வேறு விவசாயிகள் எங்களோடு இந்த விவசாயத் தொழில் போகட்டும் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம், எங்கள் பிள்ளைகளாவது நன்றாகப் படித்து, உயர்ந்த வேலைகளுக்குச் செல்லட்டும் என்று கண்ணீர் விட்டு கோஷமிட்டும், ஆதங்கத்தோடும் காணப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி செல்ல பெருமாள் கழுத்தில் இரு மனித மண்டை ஓடுகளுடன் காணப்பட்டார். அவர் நிருபர்களிடம் கூறுகையில் “ எனது உறவினர்கள் இருவர் வேளாண் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் மண்டை ஓடுதான் என்கழுத்தில் தொங்குகிறது. தற்கொலை செய்துகொண்ட எனது இரு உறவினர்களின் குழந்தைகளும் தற்போது படித்து வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் தந்தையைப் போன்று விவசாயிகளாக மாற விரும்பவில்லை. எனது பிள்ளைகளையும் விவசாயித்துக்கு கொண்டுவரமாட்டேன். ஏராளமான பிரச்சினைகளையும், சிக்கல்களையும், தடைகளையும் விவசாயிகளான நாங்கள் சந்தித்து வருகிறோம். ஏராளமான விவசாயிகள் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். விவசாயத்தை தொழிலாளகச் செய்யாமல் எங்கள் பிள்ளைகள் வேறுவேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவது வேதனையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகுத்சிங் கூறுகையில் “ என்னுடைய குழந்தைகள் யாரும் விவசாயம் செய்ய விடமாட்டேன். என் பிள்ளைகளை நன்று படிக்கவைத்து வேலைக்கு அனுப்பப்போகிறேன். அரசின் புள்ளிவிவரங்களில் நாட்டில் 40 சதவீத விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டார்கள். ஆதலால், எங்கள் பிள்ளைகளும் விவசாயத்தைத் தேர்வு செய்யமாட்டார்கள். எங்கள் உரிமைக்காகவே நாங்கள் எப்படிப் போராடுகிறோம். இதே நிலை அவர்களுக்கு வர வேண்டுமா “ எனத் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பூல் சிங் சியாகாந்த் கூறுகையில் “ என்னுடைய குழந்தைகள் விவசாயத்தைக் கைவிட்டு, ஏதாவது கடை வைத்துப் பிழைப்பு நடத்தத் தயாராக இருக்கிறார்கள். மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் ஊதியம் கிடைத்தால் போதும் என்கிறார்கள். ஆனால், விவசாயத்தை மட்டும் செய்ய வேண்டாம் என்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் கூறுவதைப் போலத்தான் விவசாயிகள் குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் பெற்றோர் படும் துன்பத்தைப் பார்த்து கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.எம்.சிங் மேடையில் பேசுகையில் “ விவசாயிகள் பரம்பரை அழிந்துவிடக்கூடாது, நமது பிள்ளைகளையும் விவசாயத்துக்குள் கொண்டுவர வேண்டும். நாம் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது “ என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x