

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தைத் தமிழக எம்.பி.க்கள் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்த்து வருகின்றனர்.
மாநிலங்களவை இன்று காலை தொடங்கி அலுவல்கள் வாசிக்கத் தொடங்கியதும், அதிமுக எம்.பி.க்கள் மேகேதாட்டுஅணை விவகாரத்தை எழுப்பினார்கள், அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் கோஷமிட்டனர். தமிழகத்துக்கு நீதி தேவை என்று இரு கட்சி எம்பிக்களும் முழுக்கமிட்டனர்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தமிழக எம்.பி.க்களை அமைதியாக இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். உங்கள் கோரிக்கையை கேள்வி நேரத்து்கு பிந்தைய நேரத்தில் எடுத்து விவாதிக்க அனுமதி தருகிறேன் என்று துணைத் தலைவர் தெரிவித்தார்.
ஆனால், அதிமுக, திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு அவையின் மையப்பகுதியில் நின்று கோஷமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், பல்வேறு விஷயங்களில் நாங்கள் விவாதம் நடத்த உள்ளோம் என்று கூறினர்.
ஆனால், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாடாளுமன்ற அமளியில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மேகேதாட்டு பிரச்சினை என்பது அதிமுகவுக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்சினை, இந்த அமளிக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சியையும் குறைகூறக்கூடாது என்று தெரிவித்தார்.
ஆனால், தொடர்ந்து அதிமுக, திமுக எம்.பி.க்களும் முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையை நண்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரிவிட்டார்.
மக்களவை தொடங்கி கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை தொடங்கிய கேள்விநேரம் சிறிந்து நேரம் நடந்தவுடன், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பினர். ரஃபேல் ஒப்பந்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேகேதாட்டு அணை விவகாரத்தை அதிமுக எம்.பி.க்களும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் கூச்சலிட்டனர்.இதனால், அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.