Published : 30 Dec 2018 08:27 AM
Last Updated : 30 Dec 2018 08:27 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்று வந்தன.

இந்நிலையில் மண்டல பூஜை நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த பூஜையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். மண்டல பூஜைக்கு பின்னர் அன்று இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறவுள்ளது. நடை திறப்பையொட்டி இன்று விசேஷ பூஜைகள் நடக்காது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

வரும் 31-ம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப் பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடை பெறும். பிரசித்தி பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி 14-ம் தேதி மாலை நடைபெறுகிறது.

இதையொட்டி, மகரவிளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப் படும் திருவாபரணங்கள் வருகிற 12-ம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ம் தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறவுள்ளது.

16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறவுள்ளது. 20-ம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்துக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக கோயில் பகுதியிலும் பம்பை, நிலக்கல் பகுதிக ளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு பெண்கள் கோயிலுக்கு வர முற்படுகின்றனர். ஆனால் அவர்களை இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதையொட்டியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x