‘‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’’ - ம.பி முதல்வர் கமல்நாத்தின் அறிவிப்பால் புதிய  சர்ச்சை

‘‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’’ - ம.பி முதல்வர் கமல்நாத்தின் அறிவிப்பால் புதிய  சர்ச்சை
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், அவ்வாறு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு  வரி விலக்கு உள்ளிட்ட சலுகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  

இதைத்தொடர்ந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். டெல்லியில் சீக்கியர்ளுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கமல்நாத்துக்கு தொடர்பு இருப்பதாக அகாலிதளம் சர்ச்சையை கிளப்பியது.

இந்தநிலையில் புதிய முதல்வர் கமல்நாத் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். போபாலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

‘‘மத்திய பிரதேசத்துக்கு, உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் இருந்து  ஏராளமான தொழிலாளர்கள் வருகின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் அவர்கள் அதிகஅளவில் பணியாற்றுகின்றனர். இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே மத்திய பிரதேசத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகஅளவு வேலை வழங்க வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத அளவுக்கு வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, ஊக்கத் தொகை வழங்கப்படும்’’ எனக் கூறியுள்ளார்.

கமல்நாத்தின் இந்த அறிவிப்புக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘வட இந்திய மக்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் அண்மையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது இதுபோன்று கமல்நாத் கூறுவது தவறானது. ஏற்க முடியாதது’’ எனக் கூறியுள்ளார்.

கமல்நாத்தின் அறிவிப்புக்கு பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறுகையில் ‘‘கமல்நாத் உ.பி மாநிலம் கான்பூரில் பிறந்து, மேற்குவங்க மாநிலத்தில் கல்வி கற்று, மத்திய பிரதேசத்தில் தற்போது அரசியல் செய்து வருகிறார். கமல்நாத் பல மாநிலங்களில் தற்போதும் தொழில் செய்து வருகிறார். குறிப்பிட்ட மாநில மக்களுக்கு எதிராக பேசும் அவரது செயல் பிரிவினை எண்ணத்தை ஏற்படுத்தும். அவரது பிரிவினை அரசில் கண்டிக்கத்தக்கது’’ எனக் கூறினார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in