Last Updated : 15 Dec, 2018 08:14 AM

 

Published : 15 Dec 2018 08:14 AM
Last Updated : 15 Dec 2018 08:14 AM

வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை: பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். முக்கிய சொத்துக்கள் தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக பொதுச்செயலாளருமான‌ சசிகலா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங் கள் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

அப்போது அதிகாரிகள் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களின் ஆவணங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆவணங்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதான தொடர்புடைய சசிகலாவிடம் சிறைத்துறை அனுமதி பெற்று, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். 2-வது நாளாக நேற்று காலை 10 மணியளவில் சென்னை மண்டல வருமான வரித்துறை உதவி ஆணையர் வீரராகவன் தலைமையில் 7 அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர். தம்முடன் கொண்டு வந்திருந்த தனியார் நிறுவனங்களின் ஆவணங்களின் அடிப்படையில் தனி அறையில் வைத்து சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர்.

அப்போது அதிகாரிகள் சசிகலாவிடம் தனியார் நிறுவனங் களின் சொத்துக்கள், அவை வாங்கப்பட்ட ஆண்டு, அப் போதைய வருமான விபரம், அதற்கான வருமான ஆதாரங்கள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும் நிறுவனங்கள் இயங்கிய பின்னணி, அதில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள், பங்குதாரர்களின் விபரம் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர். அதற்கு சசிகலா அளித்த பதில்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ததோடு, வீடியோவிலும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

மாலை 6.30 மணி வரை நட‌ந்த விசாரணையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர். அதற்கு சசிகலா, ‘‘ஆம்; இல்லை; எனக்கு தெரியாது’’ என சுருக்கமாகவே பதில் அளித்துள் ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு தினங்களாக சசிகலா தெரிவித்த பதில்கள் அனைத்தும் கோப்புகளாக தயாரிக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் சசிகலாவின் ஒப்புதல் கையெழுத் தைப் பெற்றனர்.

கடந்த இரு தினங்களில் சசிகலாவிடம் ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகளை எழுப்பிய வ‌ருமான வரித்துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் ஏதேனும் கூடுதல் விபரம் தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த அதிகாரிகள், வெளியே குவிந்திருந்த செய்தியாளர்களிடம் எதையும் தெரிவிக்காமல் சென்னைக்கு கிளம்பி சென்றனர்.

கடந்த இரு தினங்களாக சசிகலாவிடம் விசாரணை நடந்ததால் அவரது ஆதர வாளர்களும், செய்தியாளர்களும் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x