ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9 நாட்கள் நடக்கிறது

ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9 நாட்கள் நடக்கிறது
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக், தனது 9 நாள் ‘சங்கல்ப் ரதயாத்திரை’யை டெல்லியில் நேற்று தொடங்கி யது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில், பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்), விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் சிவசேனா கட்சி ஆகியவை மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் சார்பில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 9 நாள் ரதயாத்திரை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதே கோரிக்கையை வலிறுத்தி சங் பரிவார், விஎச்பி, சிவசேனா ஆகிய அமைப்புகள், சமீபத்தில் அயோத்தியில் மாபெரும் கூட்டங்கள் நடத்தி ஆலோசனை நடத்தின. அதன் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் தனது ரதயாத்திரையைத் தொடங்கி உள்ளது.

இந்த ரதயாத்திரை வரும் 9-ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முடிகிறது. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி விஎச்பி.யும் மாபெரும் பேரணி நடத்த உள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கடந்த செவ்வாய்க்கிழமை கூறும்போது, ‘‘அயோத்தி வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை காலதாமதப்படுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிறது. இந்துக்களின் அடிப்படை உரிமையை புறக்கணிக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in