

மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன்(தங்க) நதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்திய தமிழரான மணிகண்டன் ஐஏஎஸ், 11 லாரிகளுடன் மணல் மாஃபியாவை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
உ.பி.யில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட ஒரே மாவட்டமாகக் கருதப்படுவது சோன்பத்ரா. ஜார்கண்ட், பிஹார் மற்றும் மபி ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் இது அமைந்துள்ளது. இங்கு ம.பி.யில் தொடங்கி சோத்பத்ரா எனும் நதி ஓடுகிறது. சோன்பத்ரா நதியில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வந்துள்ளது. இதன் மீது அம்மாவட்ட முன்னாள் பாஜக செயலாளர் கமலேஷ் திவாரி, தன் கட்சி ஆளும் உ.பி. அரசு மீது புகார் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சோன்பத்ரா நதி ஓடு கோராவல் தாலுக்கா பகுதியில் உதவி ஆட்சியரான மணிகண்டன் ஐஏஎஸ் திடீர் சோதனை மேற்கொண்டார். அதில், செனியா கிராமத்தில் நதிக்கரையில் மணலை அள்ளி 11 லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்த வாகனங்கள் சிக்கின.
உ.பி.யின் செனியாவில் இருந்து மணலை அள்ளி, அதே கரையின் ம.பி.யின் டட்ரா கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வாகனங்களில் மணலை நிரப்பியதும் சிக்கின. இந்த சம்பவத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணை தொடர்கிறது.
இது குறித்து நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான மணிகண்டன் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் கூறும்போது, ''நாள் ஒன்றுக்கு இங்கு சுமார் நூறு லாரிகளில் மணலை அள்ளியுள்ளனர். ம.பி.யின் முக்கிய மணல் மாஃபியா சிக்கியுள்ள இந்த வழக்கை இருமாநில அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.
டட்ரா பஞ்சாயத்து தலைவர் மணல் அள்ளுவதற்கான அனுமதியை ம.பி.யிலும், அதை சேமித்து வைப்பதற்கான அனுமதியை உ.பி.யில் செனியா பஞ்சாயத்து தலைவரும் வாங்கியுள்ளனர். இவற்றை சட்ட விரோதமாகப் பயன்படுத்திய இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்.
இருவரின் உரிமங்களும் தவறாகப் பயன்படுத்தியதாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நதியின் கரைகளைச் சுரண்டி மணல் அள்ளி வந்த மாஃபியாக்களைப் பிடித்தமைக்காக உ.பி.யில் மணிகண்டனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.