

சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் 31-ம் தேதி சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு அப் போதைய பிரதமர் இந்திரா காந்தியை, அவரது பாது காவலர்கள் சுட்டுக் கொன்றனர். அதன்பின் சீக்கியருக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் ஏராள மானோர் கொல்லப்பட்டனர். கலவரத்தைத் தூண்டிவிட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு (73) கடந்த 17-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் போலீஸில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தனது சொத்துக் களைப் பாகப்பிரிவினை செய்ய வும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து கடந்த 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செயழ்தார்.
இதுகுறித்து சஜ்ஜன் குமாரின் வழக்கறிஞர் அனில் குமார் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் தாக்கல் செய்துள்ள மனு, 31-ம் தேதிக்கு முன்னதாக விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
எனவே, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கிணங்க வரும் 31-ம் தேதிக்கு முன்னதாக சஜ்ஜன் குமார் சரணடைய உள்ளார்’’ என்று தெரிவித்தார்.ஜனவரி 1-ம் தேதிவரை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகு, சஜ்ஜன் குமாரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - பிடிஐ