Last Updated : 26 Dec, 2018 07:27 PM

 

Published : 26 Dec 2018 07:27 PM
Last Updated : 26 Dec 2018 07:27 PM

திரும்பிப் பார்க்கிறோம் 2018: இந்தியா- நீதிபதிகளின் குமுறலும், வரலாற்றுச் சட்டமும் (ஜன. முதல் ஏப். வரை)

2018-ம் ஆண்டின் கடைசி விளிம்பில் நிற்கிறோம். அடுத்த சில நாட்களில் 2018-ம் ஆண்டை மறந்துவிட்டு, 2019-ம் ஆண்டில் பயணிக்கப் போகிறோம். இந்த 2018-ம் ஆண்டில் நாம் பல்வேறு வகையான சம்பவங்களை கடந்து வந்திருப்போம்.

சாதனைகள், வெற்றிகள், அரசியல் மாற்றங்கள், இழப்புகள், விபத்துகள், துயரங்கள், இயற்கைப் பேரிடர்கள், மறக்க முடியாத மனிதர்கள் என பலவற்றை 2018-ம் ஆண்டு உணர்த்திவிட்டது. 2019-ம் ஆண்டுக்குள் செல்லும் முன் நாம் கடந்து வந்த பல்வேறு விஷயங்களைச் சற்று திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்லலாமே…

இன்றைய நிகழ்வுகள், நாளை வரலாறுகள். வரலாறு மனிதர்களின் நினைவுசேகரம். நினைவுகள்தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைக்கும்.

முதல்நாளே சாதனை (ஜன.1)

new-bornjpg100 

புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் குழந்தைகள் பிறந்தன. உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்த நிலையில், இந்தியாவில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்தது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்தன.

லாலுவுக்கு சிறை (ஜன.6)

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கால்நடைத் தீவன ஊழலில் லாலு மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாஸ்பாஸா கருவூல மோசடியில் 2013-ம் ஆண்டில் அவருக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர் மீதான 2-வது கால்நடைத் தீவன வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும்.

நீதிபதிகளின் குமுறல் (ஜன.12)

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, ஜனநாயகம் இல்லை, வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நால்வர் திடீரென வெளிப்படையாகப் புகார் தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

2018-ல் முதல் ராக்கெட் (ஜன.12)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதில் கார்ட்டோசாட்-2 என்ற செயற்கைக்கோள் இஸ்ரோ தயாரித்த 100-வது செயற்கைக்கோளாகும்

புதிய நியமனம் (ஜன.21)

தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை (வயது 64) நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் அக்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் முடிவதையொட்டி ராவத் நியமிக்கப்பட்டார்.

69-வது குடியரசு தினம் (ஜன.26)

prez-indiajpgjpg100 

நாட்டின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாகத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவரான பிறகு அவர் பங்கேற்கும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். இம்முறை விழாவில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பிப்ரவரி மாதம்

கடைசி பட்ஜெட் (பிப்.1)

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த கடைசி பட்ஜெட் இதுவாகும்.

அதிரவைத்த நிரவ் மோடி (பிப்.16)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடி செய்த புகாருக்கு ஆளான வைர வியாபாரியும், தொழிலதிபருமான நிரவ் மோடி குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர் மீது வந்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்ய ஆயத்தமாவது தெரிந்தவுடன் நிரவ் மோடி தப்பினார்.

புதிய தொடக்கம் (பிப்.18)

bjp-officejpeg100 

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லியில் உள்ள 6, தீனதயாள் உபாத்யாயா மார்க் என்ற முகவரியில் இந்த புதிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது

கூண்டோடு மாற்றம் (பிப்.23)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த வைர வியாபாரி நிரவ் மோடியால் நடந்த 11,500 கோடி ரூபாய் மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே விஜய் மல்லையா வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுத் தப்பிய நிலையில், நிரவ் மோடி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடுமையாக விமர்சித்தன. இதனால், மோசடிக்கு ஆளான பிஎன்பி வங்கி ஊழியர்கள் 1,415 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

முடக்கம் (பிப்.24)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் சிக்கிய நிரவ் மோடிக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்தனர்.

பெண் சூப்பர் ஸ்டார் மறைவு (ஜன.24)

sridevijpgநடிகை சிறீதேவி 100 

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் மரணமடைந்தார். அவருக்கு வயது 55. உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக குளியல் அறையில் இறந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கில் தேர்தல் (பிப்.27)

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில் தேர்தல் நடந்தது

சங்கரமடத்தின் சோகம் (பிப்.27)

JAYENDRARjpg100 

காஞ்சி சங்கராச்சார்யர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி (வயது 82) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செயல்பட்டு வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது.

மார்ச் மாதம்

12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை (மார்ச். 2)

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்

முடிவுரை (மார்ச்.3)

திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி, 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. நாகாலாந்து, மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது.

புதிய தொடக்கம் (மார்ச். 5)

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியுடனும் நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடனும் இணைந்து, பாஜக ஆட்சி அமைப்பது உறுதியானது. கான்ராட் சங்மா, நிபியூ ரியோ ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

அகற்றம் (மார்ச்.6)

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது. பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன

உரிமை வென்றது (மார்ச். 8)

இந்துவாக இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய கேரளாவைச் சேர்ந்த ஹாதியா, சபின் ஜகான் ஆகியோரின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விலகல் (மார்ச். 8)

andra-tdp-mpsjpg100 

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால் மத்திய அமைச்சரவையிலிருந்து முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் விலகியது. அந்தக் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

கருணைக் கொலை(மார்ச். 9)

கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உலகில் பிறந்த ஒருவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோல கண்ணியமாக உயிர் துறக்கவும் உரிமை உண்டு. குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்கள் சம்மதத்துடன் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்தது.

முதல் “விற்பனை”(மார்ச். 16)

தனிமனிதர்கள் பெயர் வெளியிடாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் நிதிப்பத்திரம் முதல் கட்டமாக ரூ.222 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

நம்பிக்கையில்லை(மார்ச்.16)

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது.

புதிய மதம் (மார்ச். 19)

lingayatjpg100 

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருந்த நிலையில், அங்குள்ள பெரும்பான்மை மக்களாக இருக்கும் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை(மார்ச். 21)

இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை செய்தது.

நிம்மதி (மார்ச்.23)

மாநிலங்களவையில் எந்தவிதமான விவாதமின்றி பணிக்கொடை திருத்த மசோதா நிறைவேறியது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் கிராஜுவிட்டி தொகையில் ரூ.20 லட்சம் வரை வரியில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன் ரூ.10 லட்சத்துக்கு மேல் பெற்றால் வரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாய்ந்தது (மார்ச். 29)

ஜிசாட் 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

ஏப்ரல் மாதம்

பதவிப்பிரமாணம் (ஏப்ரல். 4)

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஜகத் பிரகாஷ் நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 41 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாகப் பதவியேற்றனர். மாநிலங்களவையைச் சேர்ந்த 58 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. 15 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தகவல் திருட்டு(ஏப்ரல். 5)

facebookjpg100 

ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளின் 8.7 கோடி பேர்களின் தனிப்பட்ட விவரங்கள் முறையற்ற வகையில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்குப் பகிரப்பட்டதாக தகவல் வெளியானது. அதை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், 5.62 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் பகிரப்பட்டது என்றது.

நீங்காத சோகம் (ஏப்ரல். 9)

இமாச்சலப்பிரதேச மாநிலம், கங்கரா மாவட்டத்தில் உள்ள மக்வால் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் பேருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 குழந்தைகள் பலியாகினர். பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குள் உள்ளவர்கள், அனைவரும் 5-ம் வகுப்புவரை படித்து வந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கடித்தது.

“தலைமை” முடிவு (ஏப்ரல். 11)

வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உச்ச நீதிமன்றம் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதித்துறையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் தலைமை நீதிபதி, எனவே வழக்குகளை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு, இதற்காக விதிமுறைகள் வகுக்க முடியாது, தலைமை நீதிபதி மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்துவதையும் ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நள்ளிரவு போராட்டம் (ஏப்ரல்.12)

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 21 வயது சிறுமி பலாத்காரம், உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் சிறுமி பலாத்காரம் என அடுத்தடுத்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

சி41-ராக்கெட் (ஏப்.12)

போக்குவரத்துக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ் - 1ஐ செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி - சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைச் சென்றடைந்தது.

சைமனின் மறைவு (ஏப்ரல்.15)

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி சைமன் (56) பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் உயிரிழந்தார். கர்நாடக - தமிழக எல்லையான சுரக்காய் மடுவு என்கிற இடத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பன் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 5 போலீஸார் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் வீரப்பனின் கூட்டாளியான சைமன் உட்பட 4 பேரை 1994-ல் கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இவருக்குத் தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தநிலையில், மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் 2014-ல் குறைத்தது. கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைமன் உடல்நலக் குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வெறுப்பு, விலகல் (ஏப்ரல். 21)

YASHWANT-SINHAjpg100 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் நிதி அமைச்சராகவும், பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கடந்த பல ஆண்டுகளாகக் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்து வந்த யஷ்வந்த் சின்ஹா பாஜகவுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின் பாஜகவைக் கடுமையாக விமர்சிப்பவராக யஷ்வந்த் சின்ஹா மாறினார்.

தூக்கு தண்டனை (ஏப்ரல்.22)

kathua-rape-casejpg100 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்கும் அவசரச்சட்டத்துக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பலாத்காரம் செய்தால் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. 

(தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x