Published : 03 Dec 2018 09:03 AM
Last Updated : 03 Dec 2018 09:03 AM

750 கிலோ வெங்காயத்துக்கு இதுதான் மதிப்பா?- 1,064 ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பி விவசாயி ஆத்திரம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

நாசிக் மாவட்டம் நிபாட் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயிதான் தனது ஆத்திரத்தையும், நாட்டின் விவசாயிகள் நிலையையும் பிரதமருக்கு உணர்த்த இவ்வாறு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, அவருடன் உரையாடுவதற்காக மத்திய வேளாண்துறை அமைச்சகத்தால் சில முற்போக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளில் சஞ்சய் சாதேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசிக் மாவட்டம், நாட்டின் வெங்காயத் தேவையை 50 சதவீதம் நிறைவு செய்கிறது. இங்கு வெங்காயம் விளைச்சல் அதிகமாகும்.

இந்நிலையில் விவசாயி சஞ்சய் சாதே தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை நாசிக்கில் உள்ள மொத்தவிலை சந்தைக்கு விற்பனைக்காக கடந்த வாரம் கொண்டு சென்றார். ஆனால், அங்கு வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் விலைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை.

பின், பேரம்பேசி கிலோ ரூ.1.40 பைசாவுக்கு விற்பனை செய்தார். அதன் மூலம் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி தனது வேதனையையும் நாட்டில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைக்காமல் நலிவடைவதையும் உணர்த்தினார். அதுமட்டுமல்லாமல் மணிஆர்டர் அனுப்பக் கூடுதலாக ரூ.54 செலவானது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து விவசாயி சஞ்சய் சாதே கூறுகையில், “ என்னுடைய நிலத்தில் 750 கிலோ வெங்காயம் விளைந்தது. அதை எடுத்து நிபாட் சந்தைக்குச் சென்றால், கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் யாரும் வாங்கத் தயாராக இல்லை. பேரம்பேசி கிலோ ரூ.1.40 பைசாவுக்கு விற்பனை செய்தேன். அதன் மூலம் எனக்கு ரூ.1,064 கிடைத்து.

ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து விவசாயம் செய்த விவசாயிக்குக் கிடைத்த கூலி இதுதானா. என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை. வேதனையைப் பொறுக்க முடியவில்லை, நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை பிரதமர் மோடிக்கு உணர்த்தும் வகையில் வெங்காயம் விற்ற 1,064 ரூபாயையும் தபால் நிலையம் மூலம் மணிஆர்டராக இந்தியப் பிரதமர் மோடி என்ற முகவரியில் பிரதமர் நிவாரண நிதிக்குக் கடந்த மாதம் 29-ம் தேதி அனுப்பினேன். இதை அனுப்புவதற்கு கமிஷனாக ரூ.54 கூடுதலாகக் கொடுத்தேன் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x