

வடகிழக்கு மாநிலமான மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மாறாக, மிசோ தேசிய முன்னணி(எம்என்எப்) கட்சி 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாகதொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி, எம்என்எப் கட்சி, பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி முயன்று தீவிரமாக பிரச்சாரம் செய்தது.
இந்நிலையில், மிசோரமில் 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எம்என்எப் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலையுடன் உள்ளது. ஜோரம் மக்கள் முன்னணி (இசட்பிஎம்) கட்சி 8 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாகவும், பாஜக ஒரு இடத்தில் முன்னணியில் இருப்பதாகவும் முதல் சுற்று நிலவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் லால் தன்ஹாவால் தனது சொந்த தொகுதியான செர்சிப் தொகுதியில் ஜோரம் மக்கள் முன்னணி வேட்வாளர் லால்துஹோமாவைக் காட்டிலும் பின்னடைவில் உள்ளார். ஆளும் காங்கிரஸ் அரசில் ஒரே பெண் அமைச்சரான வன்லாம்பு சாங்க்து பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
அதேசமயம், எம்என்எப் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜோரம்தங்கா எய்சவால் கிழக்கு தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோரம் மக்கள் முன்னணி வேட்பாளர் கே.சப்தங்காவைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளார்.