Last Updated : 28 Sep, 2014 01:44 PM

 

Published : 28 Sep 2014 01:44 PM
Last Updated : 28 Sep 2014 01:44 PM

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: அதிமுகவினருக்கு நல்லதல்ல - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து

அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவது அவர்களுக்கே நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப் பது குறித்து தி இந்துவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டது குறித்து?

இந்த தீர்ப்பு அகில இந்திய அளவில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க் கத்தினருக்கு எச்சரிக்கையாக அமையும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத், ஆசிரியர் தேர்வாணைய ஊழல் வழக்கில் ஹரியாணாவின் ஓம்பிரகாஷ் சவுதாலா இப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய படிப்பினையை இந்த வழக்கு கொடுக்கும் என நினைக்கிறேன்.

இந்த தீர்ப்பு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் தாக்கத்தை உருவாக்கும். அதிமுக ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை.

அதிமுகவின் முக்கியத் தலைவர் ஜெயலலிதா. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரே தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது, பொதுமக்கள் இடையே பெரும் தாக்கத்தை உருவாக்கத்தான் செய்யும். அது எப்படிப்பட்டது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தேசிய அரசியலிலும் இத்தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை உடனடியாக கணிக்க இயலாது. இதற்காக நாம் காத்திருக்க வேண்டி இருக்கும். தேசிய அரசியலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இருப்பது தெரிந்த விஷயம்தான். இவர்கள் மீதான இறுதி தீர்ப்பு வரும்வரை அவர்களும் குற்றவாளிகள்தானே.

பொதுமக்கள் தங்களின் அரசியல் அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில் செயல்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதி மீது எந்த வகையான குற்றச்சாட்டுகள் உள்ளன, எதன் அடிப்படையில் தண்டனை பெறுகிறார்கள் என்பதை உன்னிப்பாக பார்த்து முடிவு செய்வார்கள்.

இந்த விஷயத்தில் நீங்கள் அதிமுகவினருக்கு கூறும் அறிவுரை என்ன?

தீர்ப்புக்கு பிறகு அதிமுகவினர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வரு கிறார்கள். அவர்கள் கட்சியின் முக்கியத் தலைவரே தண்டனைக் குள்ளாகும்போது தொண்டர் களுக்கு கோபம் வரலாம். அவர் களுக்கு உணர்ச்சிப்பெருக்கும் கொந்தளிப்பும் ஏற்படலாம். ஆனால் இவை குறிப்பிட்ட எல்லைகளை மீறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கூடாது.

இந்த அனுபவம் அவர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே ஒருமுறை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு அவரது இடத்தில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். பிறகு மேல்முறையீடு வரை சென்று மீண்டு வந்தார்கள். எனவே, அதிமுகவினருக்கு ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவத்தை மனதில் வைத்து அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக் கூடாது. இது அவர்களுக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல. இந்தச் செயல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். நமது நாடு சட்டத்தை மிகவும் மதிக்கும் ஜனநாயக நாடு. எதையும் சட்டபூர்வமாகவே எதிர்கொள்ள வேண்டும்.

இந்த தீர்ப்பு அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்குமா?

தண்டனை பெற்றிருப்பது அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதால் இதுபோல் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவற்றுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைக்கே ஊகித்து சொல்ல முடியாது.

அதிமுகவுக்கு மாற்று சக்தியாக வளர்ந்து வருவதாக பாஜக கூறி வருகிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் பாஜகவுக்கு அரசியல் லாபம் கிடைக்குமா?

அப்படி அரசியல் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவின் கர்நாடக தலைவர் எடியூரப்பா செய்த ஊழலை பாஜக நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கட்சித் தலைவர்கள் மீது குஜராத் முதல் மத்தியப் பிரதேசம் வரை வழக்குகள் நடைபெற்று வருகின்றன. எனவே பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய நல்ல அரசியல் கட்சி எது என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x