மத்திய ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவே அரசு விரும்புகிறது: மக்களவையில் அருண் ஜேட்லி

மத்திய ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தவே அரசு விரும்புகிறது: மக்களவையில் அருண் ஜேட்லி
Updated on
1 min read

மத்திய ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையை மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையை இட்டுநிரப்பப் பயன்படுத்தவில்லை, மாறாக பொதுத்துறை வங்கிகளுக்கான மறு-முதலீடாகவும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை இன்னும் அதிகரிக்கவுமே மத்திய அரசு பயன்படுத்த  விரும்புகிறது என்று மக்களவையில் மத்திய நிதியமச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்த அருண் ஜேட்லி, நிதிப்பற்றாக்குறையை சரியான நிலையில் வைத்திருப்பதில் மோடி அரசு  சாதனை நிகழ்த்தியுள்ளது என்றார் அருண் ஜேட்லி.  மேலும் கூடுதல் செலவீட்டுத் தொகை ஒதுக்கீடான ரூ.85,948.86 கோடியில் பாதியளவுத் தொகை பொதுத்துறை வங்கிகளின் முதலீடாகவே உட்செலுத்தப்படவுள்ளது, என்றார் ஜேட்லி.

பொருளாதார மூலதனச் சட்டகம் குறித்து அவர் கூறும்போது, பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கி 8% தொகையினை கையிருப்பாக வைத்திருக்கும், இன்னும் பாரம்பரியமான நாடுகளில் இது 14% ஆக இருக்கும்.  ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி 28% தொகையினை ரிசர்வ் ஆக வைத்துள்ளது. இதனை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது பற்றியும், வங்கிகளுக்கு மறுமுதலீடாக அளிப்பது பற்றியும் நிபுணர்கள் குழு முடிவெடுக்கும்.

“முந்தைய அரசுகளை விட நடப்பு ஆட்சி நிதிப்பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதற்கான ஆதாரங்கள் உள்ளன, நிதிப்பற்றாக்குறையை நிர்வகிக்க எங்களுக்கு ஆர்பிஐ ரிசர்வ் தேவையில்லை.  மோடி அரசு நிதிப்பற்றாக்குறையையும்  நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது. ஆனால் அதே வேளையில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதை கடந்த 5 ஆண்டுகளாக தக்கவைத்து வருகிறது.

மோடி தலைமை அரசினால்தான் இந்தியா வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடு என்ற பெயரை ஈட்டியுள்ளது. சீனாவையும் இதில் கடந்துள்ளது.  பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜிஎஸ்டியும் நாட்டின் வரி ஆதாரத்தை அதிகரித்து, பரவலாக்கியுள்ளது. ஆகவேதான் சமூகநலத்துறைக்கு அதிக தொகை ஒதுக்கமுடிந்து வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க முடிகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வரிக் கணக்குத் தாக்கல்  செய்வொர் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது தற்போது 6.86 கோடியாக அதிகரித்துள்ளது.

விவாசயிகள் மற்றும் விவசாயத்துறை பற்றி கவலை வெளியிடுவோருக்காகக் கூறுகிறேன், விவசாயத்தின் வளர்ச்சிக்காக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அரசு அதனை எடுக்கும்” என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in