

கடந்த 2017-ம் ஆண்டில் கேரளாவில் பரவிய மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் நிபா வைரஸ் பரவியது. இதில் பலர் உயிரிழந்தனர்.
தற்போது கேரளாவின் திருச்சூர் பகுதிகளில் காங்கோ காய்ச்சல் என்றழைக்கப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் திருச்சூருக்கு வந்த ஒருவர் காங்கோ காய்ச்சல் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிலருக்கு காங்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் திருச்சூர் பகுதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியபோது, "ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பால்கன் நாடுகளில் காங்கோ காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதால் இதுபோன்ற காய்ச்சல்கள் மாநிலத்தில் பரவுகின்றன" என்று தெரிவித்தனர்.