

அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, 4,000 கி.மீ. தூரத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி அடைந்துள்ளது.
ராணுவத்தைப் பலப்படுத்த அதிநவீன ஏவுகணைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்னி ரக ஏவுகணைகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது அக்னி-4 அதிநவீன ஏவுகணை சோதனை அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் டாக்டர் அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அக்னி-4 ஏவுகணை நேற்று காலை 8.35 மணிக்கு மீண்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த ஏவுகணை திட்டமிட்டபடி எதிரி இலக்கை தாக்கி அழித்தது. இதன்மூலம் அக்னி-4 ஏவுகணை சோதனை மீண்டும் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணை 4,000 கி.மீ. தூரம் பறந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது. அத்துடன், இதில் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்ல முடியும்.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளம், 17 டன் எடையுள்ளது. நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏவுகணை 7-வது முறையாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 2-ம் தேதி இதே இடத்தில் இருந்து அக்னி-4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.