டிவியில் பேட்டி தரும் புலந்த்ஷெஹர் கலவர குற்றவாளிகள்; கைது செய்வதில் உபி போலீஸார் சுணக்கம்

டிவியில் பேட்டி தரும் புலந்த்ஷெஹர் கலவர குற்றவாளிகள்; கைது செய்வதில் உபி போலீஸார் சுணக்கம்
Updated on
1 min read

தொலைக்காட்சிகளில் பேட்டி தரும் புலந்த்ஷெஹர் குற்றவாளிகளை கைது செய்வதில் உபி போலீஸார் சுணக்கம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த கலவரத்தில் பலியான ஆய்வாளர் வழக்கில் கைதான ராணுவ வீரரிடம் அவரது கொலைக்கு பொறுப்பு ஏற்கும்படியும் உபி போலீஸார் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

உபியின் புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3 ஆம் தேதி பசுவதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. இதில், புலந்ஷெஹரின் சாய்னா காவல்நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுபம் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை முன்னிறுத்தி நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளாக புலந்த்ஷெஹர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீது வழக்கு பதிவானது.

மேலும், பெயர்களுடன் 27 பேரும், அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் வழக்குகள் பதிவானது. இவர்களில் 9 பேர் மட்டும் கைதாகி உள்ளனர். மஹாவ் கிராமத்தில் பசுக்களை வெட்டியதாக 7 பேர் மீது யோகேஷ் அளித்த புகாரில் 4 பேர் கைதாகி விசாரணை நடைபெறுகிறது.

கலவர வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தருவது அறிந்தும் அவர்களை பிடிப்பதில் உபி போலீஸார் சுணக்கம் காட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் புலந்த்ஷெஹர் போலீஸ் வட்டாரம் கூறும்போது, ‘முக்கிய குற்றவாளிகள் தொலைக்காட்சிகளுக்காக வெளியிலும், நொய்டாவின் ஸ்டுடியோக்களிலும் பேட்டி அளிப்பதாகத் தகவல் கிடைத்தும் அவர் கைது செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக ராணுவ வீரரை சுபோத்திற்கான கொலைக்கு பொறுப்பேற்கும்படி வற்புறுத்தப்பட்டு வருகிறார்.’ எனத் தெரிவித்தனர்.

சுபோத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ கிடைத்திருப்பதாகக் கூறி, அதே கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான ஜீத்து என்கிற ஜிதேந்திரா மல்லீக் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் ஜீத்து, தான் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் ஆய்வாளரை கொல்லவில்லை என்றும் கூறி வருகிறார்.

இந்த வழக்கில் சுபோத் சுட்டுக்கொல்லப்பட்ட துப்பாக்கி இன்னும் கிடைக்கவில்லை. இதனால், சுபோத்தை கொன்றது தாம் தான் என ஒப்புக்கொள்ளும்படி ஜீத்துவை உபி போலீஸார் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

புலந்த்ஷெஹர் சம்பவம் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது எனக் கருதப்படுகிறது. எனவே, அதன் குற்றவாளிகளை கைது செய்வதை விட, ஆய்வாளர் கொலை வழக்கை முடித்து வைப்பதில் உபி அரசு அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in