

புதிதாக அமைந்துள்ள மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகளை தொடர்ந்து பாஜக ஆளும் அசாம் மாநில அரசும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்ற நிலையில் மாநிலத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதல்ரவாக பொறுப்பேற்றுக் கொண்ட பூபேந்திர பாகேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் ரூ.6,100 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும், நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதைதொடர்ந்து நாடுமுழுவதும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பாஜக ஆளும் அசாம் மாநில அரசும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 600 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடுத்தடுத்து மாநில அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.