

சபரிமலையில் முக்கிய இடங்களில் உள்ள தடுப்புகளை நீக்க வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. மகர விளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வந்தனர்.
இரவு நேரத்தில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கக்கூடாது, சரண கோஷம் எழுப்பக்கூடாது என்று பக்தர்களுக்கு கெடுபிடிகளை போலீஸார் விதித்ததால், பக்தர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 60 பக்தர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனால், சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை திடீரென குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு போலீஸார் தேவையில்லாத கெடுபிடிகளை விதித்துள்ளதற்கு எதிராகவும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மேலும், சபரிமலையில் போலீஸாரின் கெடுபிடிகள் எவ்வாறு இருக்கின்றன, அங்கு நிலவும் சூழல் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், ஸ்ரீஜெகன் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.ஹேமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்திருந்தது.
இந்தக் குழுவினர் சபரிமலை, சன்னிதானம், நிலக்கல், வாவர்நடை, மகா காணிக்கை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராச்சந்திர மேனன், என் அனில் குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மூவர் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு போலீஸாருக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அதில், சபரிமலை, நிலக்கல், சன்னிதானம், வாவர்நடை, மகா காணிக்கை ஆகிய இடங்களில் போலீஸார அமைத்துள்ள இரும்புத் தடுப்புகளை நீக்க வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சரங்குத்தி வழியாகச் சன்னிதானம் வரை செல்ல பக்தர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது.
அதேசமயம், நாங்கள் முன்பே பிறப்பித்த உத்தரவான, சபரிமலையில் போராட்டங்கள் நடத்தத் தடை என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும்போது, அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் எடுக்கும் நடவடிக்கை பக்தர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி இருத்தல் வேண்டும். கட்டுப்பாடுகளையும் வரம்புமீறி விதிக்கக்கூடாது.
சபரிமலையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் போலீஸார் எடுக்கும் சுதந்திரமான நடவடிக்கைக்கு தடை ஏதும் இல்லை என உத்தரவிட்டனர்.
இதனிடையே, இம்மாதம் 15 முதல் 30-ம் தேதி வரை பம்பை, சன்னிதானம் பகுதியில் குற்றவியல் பிரிவு ஐஜி எஸ். சிறீஜித் பாதுகாப்புக்குப் பொறுப்பு ஏற்பார். நிலக்கல், வடசேரிகரா, எருமேலி ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணி டிஐஜி எஸ். சுரேந்திரன் தலைமையில் நடக்கும் என காவல்துறை தலைவர் லோக்நாத் பேரா அறிவித்துள்ளார்.