

காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று (திங்கள் கிழமை) தெரிவித்ததாவது:
''நேற்று மாலை காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவத்தினருக்கு இணையாகக் கருதப்படும் பேட் எனப்படும் பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழுவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
குப்வாரா மாவட்டத்தில் நூகம் செக்டரில் நேற்று (ஞாயிறு) காலை மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் இந்திய ராணுவத்தினரால் தக்க சமயத்தில் முறியடிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இப்படையினர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள அடர்ந்த காடுகளை பாகிஸ்தானின் குறிப்பிட்ட இடங்களிலிருந்து நிறுவப்பட்ட ஏவுகணை லான்சர்கள் மூலம் அதிக திறன்கொண்ட ஆயுதங்களைக் கொண்டு நெருப்புகளைக் கக்கி அழிக்க முற்பட்டனர்.
அதற்குள், இத்தீவிரவாதக் குழுவினரின் செயல்பாடுகள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரின் விழிப்புணர்வால் கண்டறியப்பட்டது.
அடர்ந்த காட்டுப் பகுதிகளும் கடினமான மலைப்பகுதிகளும் சூழ்ந்த இடமாதலால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினரைப் போன்ற இக்குழுவினரின் நாசகார வேலைகளை முழுமையாக தகர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன''.
இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதை நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானின் இந்த பேட் அமைப்பு கடந்த ஆண்டு மே 2017-ல் இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் நுழைந்தபோது இந்திய எல்லை ரோந்துப் படையினரால் பொறிவைத்துப் பிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.