

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கைகோக்க தாம் தயாராக இருப்பதாக சமாஜ்வாதி லோஹியா கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் தெரிவித்தார்.
சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சகோதரர் சிவபால் சிங். அகிலேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி தொடங்கினார்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மட்டுமே சமாஜ்வாதி லோஹியா கட்சியின் லட்சியம். இதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக கூட்டணி வியூகம் அமைக்கும் கட்சிகள், எங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இந்தத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.
அயோத்தி விவகாரத்தை பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு அங்கு கோயில் எழுப்ப முயற்சிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.