Last Updated : 28 Dec, 2018 11:15 AM

 

Published : 28 Dec 2018 11:15 AM
Last Updated : 28 Dec 2018 11:15 AM

2019 ஏப்ரல் முதல் அமல்; வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

போலி நம்பர் பிளேட்டுகளைத் தடுக்கும் வகையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

குரோமியம் பூச்சு கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் வாகனத்தின் முன்பக்க, பின்பிக்க நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்படும். அதில் வாகனத்தின் எண் லேசர் ஒளிக்கற்றை மூலம் பொறிக்கப்பட உள்ளன.

மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''2019 ஏப்ரல் 1 முதல், வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தி டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வது கட்டாயமாக்கி, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜுன் 5-ம் தேதி நடந்த கூட்டத்தில் மோட்டார் வாகன விதிகள்-1989, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் - 2001 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டு அதன்மீதான ஆலோசனைகள், பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள், இந்திய வாகன ஆய்வு மையம், மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டானது வாகனத்திலிருந்து அகற்ற முடியாததாகவும், மறுமுறை வேறு எவரும் பயன்படுத்த முடியாத வகையில் வாகனத்துடனே பொருத்தும் வகையில் அமைக்கப்படும்.

உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டை பழைய வாகனங்களுக்கும் பொருத்தலாம்.  ஆனால், நம்பர் பிளேட்  உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மாநில அரசின் அங்கீகாரத்தை பெற்றிருந்தால், பழைய வாகனங்களுக்கும் அவற்றைத் தயாரித்து வழங்க அனுமதி உண்டு''.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ குரோமியம் பூச்சு கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் வாகனத்தின் முன்பக்க, பின்பிக்க நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்படும். அதில் வாகனத்தின் எண் லேசர் ஒளிக்கற்றை மூலம் பொறிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x